தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்திய அளவில் 43 சதவீதம் தமிழகப் பெண்கள் பணியாற்றுகின்றனர்" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்! - Tirunelveli

Minister TRB Rajaa: இந்திய அளவில் உள்ள தொழிற்சாலைகளில் 43 சதவீதம் தமிழகப் பெண்கள் பணியாற்றுகின்றனர் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

industrial Minister TRB Rajaa
industrial Minister TRB Rajaa

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 8:59 PM IST

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகளை, தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், "தொழிற்சாலை நிர்வாகிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப இனி வரவிருக்கும் நாள்களில் மாதத்தின் முதல் திங்கட்கிழமையும் சிப்காட்டில் தொழில் நடத்துபவர்களுக்கான குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்.

நான் ஆய்வு செய்த தொழிற்சாலைகளில் அனைத்திலும் பெண்கள்தான் அதிக அளவு பணிபுரிகிறார்கள். குறிப்பாக டாடா சோலார் நிறுவனத்தில் 88 சதவீதம், போஷ் நிறுவனத்தில் 75% பெண்கள் பணியாற்றுகின்றனர். மேலும் இந்திய அளவில் உள்ள தொழிற்சாலைகளில் 43 சதவீதம் தமிழகப் பெண்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழக அரசின் நடவடிக்கையாலே இது போன்ற நிலை சாத்தியமாகி உள்ளது. ’புதுமைப் பெண்’ உள்ளிட்ட திட்டங்களால் வருங்காலங்களில் இந்த நிலை இன்னும் அதிகரிக்கும். கங்கைகொண்டான் சிப்காட் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

நிலங்களைத் தாமாக முன்வந்து கொடுப்பவர்களுக்கு அதற்கான உரிய விலை கொடுக்கப்பட்டு, சிப்காட் விரிவாக்கம் செய்யப்படும். டாடா சோலார் நிறுவன பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறைவடைய வாய்ப்புள்ளது. புதிய தொழிற்சாலைகளைத் தமிழக முதலமைச்சர் நேரடியாகத் திறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்’ கலைஞரின் கனவுத் திட்டம். அதில் சில சட்ட ரீதியான பிரச்சனைகள் உள்ளது. அதனைச் சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, விரைவில் நல்ல தகவல் தரப்படும்.

விண்வெளி ஆய்வு பாதுகாப்புத் துறை ஆகியவற்றிற்குத் தேவையான உபகரணத் தொழிற்சாலைகளில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை விரைவில் எட்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ் புதிய தொழிற்சாலைக்கான பணிகளைத் தமிழக முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

16,000 கோடி முதலீட்டில் பேட்டரி கார் தொழிற்சாலை அமைய உள்ள நிலையில் முதற்கட்டமாக நான்காயிரம் கோடி முதலீடு தூத்துக்குடியில் செய்யப்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்குத் தேவையான துணை நிறுவனங்களும் அங்கே வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதி முழுமையாக வளர்ச்சியை அடையும். நெல்லை மாவட்டத்திற்கும் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளது. 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விஷ்ணு, சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில் ராஜ், உள்ளிட்டோருடன் இருந்தனர்.

இதையும் படிங்க:அழிவை நோக்கிச் செல்கிறதா தாமிரபரணி ஆறு? சூழலியல் ஆய்வாளர்கள் முன்வைப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details