12 கி.மீ ஸ்கேட்டிங் செய்த 4 வயது சிறுவன் சாதனை தென்காசி:4 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் பங்கேற்கும் ஸ்கேட்டிங் உலக சாதனை முயற்சியில் இதுவரை அதிகபட்சமாக 7 கிலோ மீட்டர் தூரம் வரை ஸ்கேட்டிங் செய்து அஜய் என்ற சிறுவன் சாதனை படைத்து இருந்தார். இந்நிலையில், அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக, 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்கேட்டிங் செய்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் புத்தகத்தில் தென்காசியை சேர்ந்த மாணவர் இடம் பிடித்து உள்ளார்.
தென்காசியை சேர்ந்த மகாதேவ் என்ற 4 வயது சிறுவன், ஸ்கேட்டிங்கில் அதிக ஆர்வம் கொண்டு காணப்படுகிறார். சிறுவனின் பெற்றோர்கள் மாணவனின் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக, கடந்த ஒன்றரை மாதமாக தொடர் பயிற்சியில் சிறுவன் ஈடுபட்டு வந்ததாக ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் பாக்கியராஜ் கூறுகிறார்.
இந்த நிலையில், யுனிவர்சல் புக் ஆஃப் ரிக்கார்டில் புதிய சாதனை படைக்கும் முயற்சியில் சிறுவன் மகாதேவ் ஈடுபட்ட நிலையில், இந்த நிகழ்வை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தொடங்கி வைத்தார். மகாதேவ் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் 42 நிமிடங்கள் 44 நொடிகளில் கடந்து சாதனை படைத்து உள்ளார்.
மகாதேவ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சிறுவன் பயிலும் பள்ளியில் மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் கிராமத்தில் வசிக்கும் ஏராளமான இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி பல்வேறு விளையாட்டுகளில் முன்னேறி வருவதால் தென்காசி மாவட்டத்தில் விளையாடுவதற்கு என்று தனி மைதானம் அமைத்து தர வேண்டும் என பயிற்சி ஆசிரியர் பாக்கியராஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் பீரங்கி குண்டுகள் உருவாக்கி அசத்தல்.. ஐஐடி மெட்ராஸ் சாதனை!