தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்த 3 மீனவர்கள் தாயகம் திரும்பினர்.. அரசு வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு! - fisherman Arrival in TN

Fisherman Release in Sri Lanka jail: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை வந்தடைந்த 3 மீன்பிடி படகு ஓட்டி மீனவர்களையும் வரவேற்ற தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு வாகனத்தில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 11:34 AM IST

சென்னை:ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி லோபஸ்(34). இவர் கடந்த மார்ச் மாதம் ராமேஸ்வரத்தில் இருந்து தனது படகில் 8 மீனவர்களுடன், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல, தரங்கம்பாடியைச் சேர்ந்த அன்புராஜ்(39), கடந்த மார்ச் 5ஆம் தேதி தனது படகில் 13 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையிடம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், காரைக்காலைச் சேர்ந்த முருகானந்தம்(45) என்பவர் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி 15 மீனவர்களுடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, இந்த 3 மீனவர்களுடன் சென்ற மீனவர்கள் ஏற்கனவே, இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு திரும்பி விட்டனர். ஆனால் படகுகளை ஓட்டிச் சென்ற 3 மீனவர்களுக்கும் கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனவே இவர்கள் தொடர்ந்து இலங்கை சிறையிலிருந்து வந்தனர்.

இந்த நிலையில், சிறையிலிருந்த 3 மீனவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்தியத் தூதரக அதிகாரிகள் மீனவர்கள் மூன்று பேருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி, விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைப்பதற்காக விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்தனர்.

அதனையடுத்து, மீனவர்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய, மூன்று மீனவ படகோட்டிகளையும், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனம் மூலம், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சட்டசபை இடைத்தேர்தல்: 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details