சென்னை:பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பினர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், சுமார் 28 பேரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளும், பிரபல ரவுடிகளும், வழக்கறிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவேங்கடம் என்ற ரவுடியை ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் 30 நபர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 26 நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை கைதியாக உள்ள A1 குற்றவாளி நாகேந்திரன் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யவில்லை. சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் குண்டாஸ் பதிவு செய்யப்பட்ட 26 நபர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறையினர் இன்று (அக்.22) மாலை அழைத்து சென்றனர்.