ராமநாதபுரம்:ராமநாதபுரம் பகுதிகளில் போதைப் பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம், சார்பு ஆய்வாளர்கள் தினேஷ், தங்க ஈஸ்வரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கொண்ட தனிப்படையை அமைத்தார். இந்த தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று (அக்.24) இரவு பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச்சாலை குப்பைக் கிடங்கு பகுதியில் மறைந்திருந்து போதைப் பொருள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 300 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பாக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேவிபட்டினத்தைச் சேர்ந்த முகம்மது ஹாரீஸ்(29), ராமநாதபுரம் நேருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன்(30) என்பதும், இவர்கள் இந்த போதைப் பொருளை ராமநாதபுரம் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும், அதை முகம்மது ஹாரீஸ் சென்னையிலிருந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 4 விலையுயர்ந்த செல்போன்கள், பாஸ்போர்ட், ரூ.45 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது.. சென்னையில் பரபரப்பு!
பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், "விலையுயர்ந்த போதைப் பொருளான மெத்தபெட்டமைன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 300 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளின் மதிப்பு ரூ.32 லட்சம் ஆகும்.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.50 கோடிக்கு மேல் இருக்கும். சர்வதேச அளவில் இந்த போதைப் பொருள் கடத்தப்படுவது வழக்கம். ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்திலேயே இந்த போதைப்பொருள் விற்கப்படுவது முதன் முறையாக தெரிய வந்துள்ளது. அதனால் இளைஞர்கள், மாணவர்கள் இதுபோன்ற போதைப் பொருளை பயன்படுத்தக் கூடாது.
இதுபோன்ற போதைப் பொருள் வைத்திருந்தால் கைது செய்யப்பட்டு, அவர்களது வாழ்க்கை சீரழிந்துவிடும். முகம்மது ஹாரீஸ் தலைமையின் கீழ் சிலர் சில்லறை விற்பனையாளர்களாக இருந்து இதுபோன்ற போதைப் பொருளை விற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர். தற்போது, கைது செய்யப்பட்ட இருவரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்