திருச்சி:திருச்சி மாநகர் பகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு, பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உத்தரவை அடுத்து "ஆபரேஷன் அகழி" என்ற பெயரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 14 தனிப்படை அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, திருச்சி கே.கே. நகர் அருகே திருவள்ளுவர் தெருவில் ஆபரேஷன் அகழி சோதனையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையிலான தனிப்படை ஈடுபட்டது.
அப்போது, ஏற்கனவே நில உரிமையாளர்களிடமிருந்து ஆவணங்களை அபகரித்து, மிரட்டி பணம் சம்பாதித்த செந்தில், அண்ணாமலை ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில், அண்ணாமலை தலைமறைவானார். இந்த நிலையில் அவரது தோழியின் வீட்டில் தனிப்படை சோதனையில் ஈடுப்பட்டது. அப்போது, வீட்டில் லட்சக்கணக்கில் கட்டுக் கட்டாக பணம், நகைகள் இருந்ததால் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:மனைவிக்கு பங்கு கொடுக்காத மாமியாரை கொன்ற மருமகன்.. தேனி நீதிமன்றம் விதித்த தண்டனை என்ன?
வருமான வரித்துறை சோதனையில், 18 லட்சத்து 92 ஆயிரத்து 750 ரூபாய், 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 17 பத்திர ஆவணங்கள் சேர்த்து, 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த வாரம் கொட்டப்பட்டு செந்தில் மற்றும் அண்ணாமலை இருவர் மீதும் மிரட்டல் மற்றும் போலியாக நில பத்திரங்களை தயாரிப்பது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, அண்ணாமலை நில பத்திரங்கள் குறித்து மிரட்டும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரவுடி அண்ணாமலையை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
மேலும், நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை யாரும் அபகரித்தால், குற்றவாளிகள் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாக , மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ , மற்றும் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என்றும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கைபேசி எண்ணுக்கு +91 94874 64651 தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்