ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளன. இந்த முறை அணிகளில் முக்கியத்தக்க வகையில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடரும் நிலைப்பாட்டுடன் ரோகித் சர்மா இருக்கிறாரா உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே ஐபிஎல் தொடங்கிய 17 சீசன்களில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாமல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பரிதாபகர நிலையில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கவனித்து வந்த போதிம், அந்த அணி குறிப்பிட்டு கூறும் வகையில் எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை.
கடந்த சீசனில் கூட டெல்லி அணி மோசமான தோல்விகளை எதிர்கொண்டது. இதையடுத்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகினார். இந்நிலையில், புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் டெல்லி அணி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் யுவராஜ் சிங்கை பயிற்சியாளராக நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.