கொழும்பு:இந்தியா - இலங்கை அணிகள் இடையே நேற்று (ஆக.2) நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. இருப்பினும், வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் முறை நேற்று கடைபிடிக்கப்படவில்லை. பலருக்கு எழுந்த சந்தேகம் ஏன் சூப்பர் ஓவர் நேற்று கடைபிடிக்கப்படவில்லை என்பது தான்.
அதற்கான காரணத்தை ஐசிசியின் விதிமுறைகள் புத்தகம் கூறுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசியின் விதிமுறைகளின் படி லிமிடெட் ஓவர்கள் அதாவது குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மட்டுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாத பட்சத்தில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையை கொண்டு வரலாம் என ஐசிசி விதிமுறையில் கூறப்படவில்லை. அதேநேரம் டி20 கிரிக்கெட் போட்டிகள் சமனில் முடிந்தால் அப்போது சூப்பர் ஓவர் கடைபிடிக்க ஐசிசி அனுமதித்து உள்ளது. அதேநேரம் 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டதே என்ற கேள்வி எழலாம்.
அதற்கும் ஐசிசியின் விதிமுறை புத்தகம் விளக்கம் தருகிறது. அதன்படி இரு நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் என்பது அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடித்து இருதரப்பு போட்டிகளை நடத்துகின்றன. அதில் ஒரு ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்க வேண்டியதில்லை.