ஐதராபாத்:இந்திய கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷா, அண்மையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து விலகினார். கடந்த ஜனவரி மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மேலும் ஒராண்டு காலம் நீட்டிக்க ஜெய்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அதனை அவர் மறுத்தார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஜெய்ஷா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஐசிசியின் தலைவராக கிரெக் பார்க்லே உள்ளார். அவரது பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே அவரது பதவிக் காலம் நிறைவு பெற்று நிலையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
புதிய தலைவர்:இந்நிலையில், கிரெக் பார்க்கலே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக இருக்க விரும்பவில்லை என ஐசிசி இயக்குநர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். இதனால் வரும் நவம்பர் மாதத்துடன் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார். அதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு ஜெய்ஷா போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து அவர் விலக நேரிடும். இந்நிலையில், பிசிசிஐயின் அடுத்த செயலாளர் யார் என்ற பேச்சுவார்த்தை பலமாக எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. ராஜீவ் சுக்லா, ஆசிஷ் ஷெலர், அருண் துமால் ஆகியோரின் பெயர்கள் அடுத்த பிசிசிஐ செயலாளர்களுக்கான பெயர்களில் அடிபடுவதாக கூறப்படுகிறது.
அடுத்த தலைவர் யார்?:
ஐசிசி தலைவர் பதவியைப் பெறுவதற்கு 16 ஐசிசி உறுப்பினர்களில் 15 பேர் ஜெய்ஷாவை ஆதரிப்பதாக நம்பப்படுகிறது. அதேநேரம் பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷாவுக்கு இன்னும் ஒராண்டு பணிக் காலம் உள்ளது. இதனால் அடுத்த 96 மணி நேரத்தில் பிசிசிஐயின் செயலாளர் மற்றும் ஐசிசியின் தலைவர் ஆகிய இரண்டு முடிவுகளை ஜெய்ஷா எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.