தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரசிகர்களை மகிழ்வித்த தோனி.. ஓய்வு குறித்த அறிவிப்பு எப்போது? - MS Dhoni - MS DHONI

M.S.Dhoni: இந்த சீசனின் கடைசி லீக் ஆட்டம் என்பதால், தோனி டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை ரசிகர்கள் மத்தியில் அடித்து மகிழ்விக்கச் செய்தார்.

எம்.எஸ்.தோனி புகைப்படம்
எம்.எஸ்.தோனி புகைப்படம் (Credit: ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 10:32 PM IST

Updated : May 12, 2024, 10:50 PM IST

சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி இன்று (மே 12) சென்னை சேப்பாக்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அதில் சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்ததோடு, பிளே ஆஃப்பிற்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தி இருக்கிறது.

குறிப்பாகச் சென்னை அணிக்கு சேப்பாக்கத்தில் கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களின் மத்தியில் போட்டிக்கான எதிர்பார்ப்பை விட தோனி ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த கேள்வியே அனைவரின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சென்னை அணி இரண்டாவது தகுதிச்சுற்று வரை முன்னேறினால் மட்டுமே சேப்பாக்கத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனால் இந்த போட்டியே கடைசி போட்டியாக இருக்கும். ஏதுவாக இருந்தாலும் இன்று தோனி ஓய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.

இந்த சீசன் முழுக்கவே சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்பதை விட தோனியை களத்தில் கண்டால் போதும் என்று தான் ரசிகர்கள் இருந்தனர். சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த போது கூட "தோனி பேட்டிங்கை பார்க்க முடிந்தது, அது போதும்" என்று ரசிகர்கள் பலர் கூறியிருந்தனர்.

எனவே ரசிகர்களின் எண்ணம் எல்லாம் தோனி என்ற ஒற்றை மனிதனை நோக்கித்தான் இருந்தது. இந்த நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, போட்டி நிறைவடைந்த பின்பு ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் காத்திருக்கும் படி சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

போட்டி முடிந்த பின்பு தோனி மற்றும் பிற சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தில் கூடினர். சரி தோனி ஏதேனும் பேசுவார், ஓய்வு குறித்த அறிவிப்பை அறிவிக்கப்போகிறாரா? என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தோனியோ, சிஎஸ்கே நிர்வாகமோ அது போன்ற அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மாறாகப் போட்டி முடிந்த பின்பு மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

தோனியும் டென்னிஸ் ராக்கெட் அதாவது டென்னிஸ் பேட் மூலம் பந்துகளை ரசிகர்கள் மத்தியில் அடித்து அவர்களை மகிழ்வித்தார். முன்னதாக தோனி, "என்னுடைய கடைசி போட்டியைச் சென்னையில் தான் விளையாடுவேன்" என மிகவும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். இந்த சீசனில் அதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கவே செய்கிறது.

அதனாலேயே இன்று அவர் மைதானத்தில் தனது ஓய்வு குறித்து பேசாமல் இருந்திருக்கலாம். ரசிகர்களின் மத்தியில் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தாலும், எவரும் எதிர்பார்க்காத போது அமைதியாக சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க:சென்னை அபார வெற்றி! 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது! - IPL 2024 CSK Vs RR Match Highlights

Last Updated : May 12, 2024, 10:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details