செயின்ட் லுசியா: இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டி20 கிரிக்கெட் போட்டி செயின்ட் லுசியா மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 55 ரன்களும், ஜேக்கப் பெத்தல் 62 ரன்களும் குவித்தனர். இதனால் இங்கிலாந்து கவுரவமான ஸ்கோரை வெற்றி இலக்கை வெஸ்ட் இண்டீஸ்க்கு நிர்ணயித்தது.
தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் ஹோப் மற்றும் எவின் லிவீஸ் அபாரமாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 136 ரன்களை பார்டனர்ஷிப்பாக சேர்த்தது. எவின் லிவீஸ் (68 ரன்) அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் சாய் ஹோப் 54 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனிடையே களமிறங்கிய விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சிறிது நேரம் வரை வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி திடீரென தடுமாற்றத்தை எதிர்கொண்டது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் கேப்டன் ரோவமன் பவெல் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
38 ரன்கள் விளாசிய நிலையில் பவெல் எல்பிடள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஷெர்பேன் ரதர்போர்ட் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 19 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் விளாசி வெற்றியை ருசித்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது. ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 3-க்கு 1 என்ற கணக்கில் உள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (நவ.17) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப்: மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன்! பிரக்ஞானந்தா 2வது இடம்!