சண்டிகர்:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 14) தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் வினேஷ் போகத் எதிர்கொண்ட சாவல்கள் குறித்து 3 பக்கம் உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது பயிற்சியாளர், குடும்பத்தார்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "சிறிய கிராமத்தில் பிறந்த எனக்கு ஒலிம்பிக் குறித்தோ, மல்யுத்த களம் குறித்தோ எதுவுமே தெரியாது. நான் சிறுமியாக இருக்கும் போது எனக்கு நீண்ட முடி வேண்டும் மற்றும் கைகளில் மொபைல் வேண்டும் என்பதே கனவாக இருந்தது. எனது தந்தை சாலையில் சென்றாலும், தனது மகள் விமானத்தில் பறக்க வேண்டும் என்று விரும்பினார். 3 குழந்தைகளில் நான்தான் இளையவள் என்பதால் என்னிடம் அதிக பாசத்தைக் காட்டுவார்.
ஒருநாள் எனது தந்தை எங்களை விட்டு மறைந்து சென்றுவிட்டார். அதேபோல் தந்தை மறைந்த 3 மாதங்களில் அம்மாவுக்கு ஸ்டேஜ் 3 புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அம்மாவின் போராட்ட குணமும், பிடிவாதமும்தான் நான் இந்த நிலையை எட்டியதற்கு முக்கிய காரணம்.
ஒவ்வொரு முறையும் முடிவைப் பற்றிக் கவலைப்படாமல், மல்யுத்தம் செய்வதற்கு அம்மாவின் தைரியமே எனக்கு உதவியாக இருந்தது. அதேபோல்தான் என்னுடைய கணவர் சோம்வீர் ரதி. ஒரு நண்பராகவும், கணவராகவும் எனது ஆசைகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போதும், ஒரு அரணாக நின்று என்னைப் பாதுகாத்தவர். அவர் இல்லையென்றால் இந்த பயணமே சாத்தியப்பட்டிருக்காது. இந்த பயணத்தில் ஏராளமான நல்ல மனிதர்களையும், சில மோசமானவர்களையும் சந்தித்திருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் களத்திலும், களத்திற்கு வெளியிலும் ஏராளமான விஷயங்கள் நடந்துவிட்டன.