டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்திற்கு முதல் நாள் இரவு அவர் என்னென்ன துயரங்களை எதிர்கொண்டார் என்பது குறித்து அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் மனம் திறந்து உள்ளார்.
ஹங்கேரியை சேர்ந்த வோலர் அகோஸ், இறுதிப் போட்டிக்கு முதல் நாள் இரவு வினேஷ் போகத் பட்ட துன்பங்கள் குறித்து தனது முகநூலில் பதிவிட்ட நிலையில், சில மணி நேரத்தில் அதை அவர் அழித்ததாக தகவல் கூறப்படுகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "அரை இறுதிக்குப் பிறகு, 2.7 கிலோ எடை அதிகமாக இருந்ததால், நாங்கள் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தோம்.
தொடர் பயிற்சியிலும் தோல்வி:
ஆனால் 1.5 கிலோ எடை குறையவில்லை. பின்னர், 50 நிமிட நீராவி குளியலுக்குப் பிறகு, அவள் உடலில் ஒரு துளி வியர்வை கூட தெரியவில்லை. வேறு வழியில்லை, நள்ளிரவு முதல் காலை 5:30 மணி வரை, வெவ்வேறு கார்டியோ இயந்திரங்கள் மற்றும் மல்யுத்த நகர்வுகள் என ஒரு மணி நேரத்தில் முக்கால் மணி நேரம், இரண்டு மூன்று நிமிட ஓய்வுடன் தொடர்ந்து வினேஷ் போகத் பயிற்சி செய்தாள்.
இதையே அன்று இரவு முழுவதும் அவள் மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்கினாள். பயிற்சியின் போது கிழே விழுந்த அவளை அருகில் இருந்த நாங்கள் தூக்கி நிறுத்தினோம். மீண்டும் ஒரு மணி நேரம் நீராவி குளியலில் நேரத்தை கழித்தாள். நான் வேண்டுமென்றே வியப்படைய வேண்டும் என்ற நோக்கில் இதை எழுதவில்லை, ஆனால் அவள் இறந்திருக்கலாம் என்று நினைத்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அன்று இரவு வினேஷ் போகத் தன்னிடம் பகிர்ந்து கொண்டது குறித்தும் பயிற்சியாளர் வோலர் அகோஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.