டெல்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இருவரும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வினேஷ் போகத்தின் சகோதரி பபிதா போகத் ஏற்கனவே பாஜகவில் உறுப்பினராக உள்ள நிலையில், அவரும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதனிடையே வினேஷ் போகத்தின் பெரியப்பா எம்எஸ் போகத் ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் ஹரியானா சட்டமன்ற தேதலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இன்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். காஷ்மீர் பயணத்திற்கு முன்னதாக ராகுல் காந்தி, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை சந்தித்தார். ஹரியானா சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு ஈடுபட்டு உள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஹரியானா சட்டப் பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான காங்கிரஸ் மத்திய குழு கூடி ஆலோசனை நடத்தியது. ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 34 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹரியானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா தெரிவித்தார்.