தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரசிகரை ஆக்ரோஷமாக தாக்கச் சென்ற பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்... வைரலாகும் வீடியோ! - Haris rauf tries to attack fan - HARIS RAUF TRIES TO ATTACK FAN

Haris rauf tries to attack fan: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹாரிஸ் ராஃப், ரசிகர் ஒருவர் தனது குடும்பத்தினர் குறித்து தவறாக பேசியதாக அவரை தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹாரிஸ் ராஃப் புகைப்படம்
ஹாரிஸ் ராஃப் புகைப்படம் (Credits - AP Photos)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 3:58 PM IST

ஹைதராபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதனைதொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் அணித் தேர்வு சரியில்லை எனவும், கேப்டன்ஷிப்பில் மாற்றம் தேவை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் முதற்கொண்டு பாகிஸ்தான் அணியில் சுத்தமாக ஒற்றுமை இல்லை என விமர்சித்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், மூத்த வீரர்கள் பாபர் அசாம், ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட ஐந்து வீரர்கள் தாமதமாக நாடு திரும்புவர் என தெரிகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் தனது மனைவியுடன் ஃப்ளோரிடா மாகாணத்தில் வெளியில் சென்றபோது ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்க முற்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், ராஃப் தனது மனைவியுடன் செல்லும்போது, ரசிகர் ஒருவர் ஹாரிஸ் ராஃபை விமர்சனம் செய்கிறார். அப்போது ராஃப் 'அவர் இந்தியராக இருப்பார்' என மனைவியிடம் கூறுகிறார். உடனே அந்த ரசிகர், ‘நான் பாகிஸ்தானை சேர்ந்தவர்’ என கூறுகிறார். இதனைதொடர்ந்து அந்த ரசிகர் ஏதோ கூற இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹாரிஸ் ராஃப் அந்த ரசிகரை தாக்க செல்கிறார்.உடனே அவரின் மனைவி உள்ளிட்ட அருகில் இருந்தவர்கள் ராஃபை தடுத்து நிறுத்துகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஹாரிஸ் ராஃப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “இந்த விவகாரத்தை சமூக வலைதளம் வரை பேச வேண்டாம் என நினைத்தேன், ஆனால் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு பிரபலமான நபராக நாங்கள் இருக்கும் பொருட்டு, மக்கள் எங்கள் மீது வைக்கும் அனைத்து விதமான கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எங்களை விமர்சிக்க உரிமை உண்டு.

ஆனால் எங்களின் குடும்பத்தினரை விமர்சித்தால் அதற்கேற்றவாறு நான் பதில் அளிப்பேன். எந்த தொழில் பிரபலமாக இருந்தாலும் சரி, அவர்களின் குடும்பத்தினருக்கு தகுந்த மரியாதை அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், “ஹாரிஸ் ராஃப் மட்டும் இல்லை, எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, சக மனிதரிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்” என ஹாரிஸ் ராஃபுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலக்கப் போகும் தமிழக வீரர் பிருத்விராஜ் தொண்டைமான்! - Olympic Games 2024

ABOUT THE AUTHOR

...view details