நாக்பூர் :நடப்பாண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிளைமேக்ஸ் காட்சிகளை நெருங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் விதர்பா - மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் மட்டும் 63 ரன்கள் எடுத்து அணி நல்ல ஸ்கோரை எட்ட ஓரளவுக்கு உதவினார். மத்திய பிரதேச அணியில் அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி மத்திய பிரதேச அணியில் தொடக்க வீரர் ஹிமான்ஷு மந்திரி அபாரமாக விளையாடினார். அதேநேரம் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர். நிலைத்து நின்று விளையாடிய ஹிமான்ஷு 126 ரன்கள் விளாசி அணி 250 ரன்களை கடக்க உதவினார்.
மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 252 ரன்கள் விளாசியது. தொடர்ந்து 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய விதர்பா அணி இரண்டாவது இன்னிங்சில் அடித்து விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை அதிரடியாக உயர்த்தியது. யாஷ் ரத்தோட் 141 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.