கோயம்புத்தூர்:8வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொடரின் 2ம் கட்ட லீக் போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (சனிக்கிழமை) 2 லீக் போட்டிகள் நடைபெற்றது.
இதன் முதல் போட்டியில் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ், ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸை எதிர் கொண்டது. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சசிதேவ் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் விளாசினர்.
திருப்பூர் அணி தரப்பில் அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும், ரோகித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய திருப்பூர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா ஆகியோர் களமிறங்கினர்.
அனிருத் அதிரடி:இதில் ராதாகிருஷ்ணன் 5 ரன்னிலும், துஷார் ரஹேஜா 3 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய அமித் சத்விக் மற்றும் பாலசந்தர் அனிருத் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார்.
இதில் அமித் சத்விக் 28 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேற, அடுத்த வந்த கனேஷ் 10 ரன்களுக்கு விக்கெட் இழந்தார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அனிருத் 28 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர் என 52 ரன்கள் விளாசி இருந்த நிலையில், முருகன் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சாய் கிஷோர் 16 ரன்களுக்கு விக்கெட் இழந்தார். இறுதியில் முகமது அலி 34 ரன்கள், மதிவாணன் 4 ரன்கள் சேர்த்தனர். இதனால் 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி.
முதல் வெற்றி:நடப்பு டிஎன்பில் தொடரில் கோவை அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த திருப்பூர் அணி, அதற்கு அடுத்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தோல்வியுற்றது. இந்த நிலையில் மதுரை அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள திருப்பூர் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.. யார் தெரியுமா?