தர்மசாலா:இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நான்கு டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
ஜேம்ஸ் ஆண்டர்சன்:முன்னதாக 186 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மொத்தமாக 698 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே போல் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 167 டெஸ்ட் போட்டிகளில் 604 விக்கெட்டுகளை கைப்பற்றி, வேகப்பந்து வீச்சாளர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தன்னுடைய 21 வயதில் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர், இங்கிலாந்து அணிக்காகப் பல போட்டிகளில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பைத் தந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளர். இதன் காரணமாக தற்போது அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக வலம் வருகிறார்.