ஐதராபாத்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று (நவ.13) நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் திலக் வர்மா (107 ரன்) அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அரை சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள்:
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் மொத்தம் 13 சிக்சர்கள் விளாசினர். அதிகபட்சமாக திலக் வர்மா 7 சிக்சரும், அபிஷேக் சர்மா 5 சிக்சர்களும் விளாசினர். இதன் மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த சாதனையை படைத்து இருந்தது.