தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப்: பிரக்ஞானந்தா - கார்ல்சென் ஆட்டம் டிரா! - TATA STEEL CHESS

டாடா ஸ்டீல் இந்தியா செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா - நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான போட்டி பயங்கர விறுவிறுப்புக்கு மத்தியில் சமனில் முடிந்தது.

Etv Bharat
Pragyananda Vs Carlsen (ANI)

By ETV Bharat Sports Team

Published : Nov 14, 2024, 1:19 PM IST

ஐதராபாத்:6வது டாடா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று (நவ.13) தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 5 இந்தியர்கள் உள்பட 10 பேரும் பங்கேற்றுள்ளனர்.

முதல் 3 நாட்களில் ரேபிட் வடிவிலான போட்டியாக நடைபெறும். மொத்தம் 9 சுற்றுகளை கொண்ட நிலையில், முதல் நாளான நேற்று 3 சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய இந்த போட்டியில் கார்ல்சென், தமிழகத்தின் பிரக்ஞானந்தாவுடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கார்ல்சென் 35வது நகர்த்தலில் டிரா கண்டார். இதேபோல் நிஹல் சரினுடனும் டிரா செய்த கார்ல்சென், இன்னொரு ஆட்டத்தில் விதித் குஜராத்தியை 69வது நகர்த்தலில் வீழ்த்தினார். கார்ல்செனுடன் டிரா கண்ட பிரக்ஞானந்தா, ரஷ்யாவை சேர்ந்த டேனில் துபோ என்பவருடனும் டிரா செய்தார்.

ஆனால் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசட்டோரோவிடம் 46வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி தனது முதல் 3 ஆட்டங்களிலும் டிரா கண்டார். ஓபன் பிரிவில் 3 சுற்று முடிவில் அப்துசட்டோரோவ் இரண்டரை புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து இந்தியாவின் எஸ்.எல். நாராயணன் மற்றும் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சென், பிலிப்பைன்சின் வெஸ்லி சோ தலா 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளனர். மகளிர் பிரிவில் 3 சுற்று முடிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா, கேத்ரினா லாக்னோ, இந்தியாவின் வந்திகா அகர்வால் ஆகியோர் தலா ஒரு வெற்றி, 2 டிரா என 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து உள்ளனர்.

அதேநேரம் தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி ரஷியாவின் வேலன்டினா குனினாவிடம் தோல்வியை தழுவினார். மற்ற இந்திய வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது மூன்று சுற்றுகளையும் டிராவில் முடித்தனர். இரு பிரிவிலும் இன்று (நவ.14) மேலும் 3 சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க:2 உலக சாதனை படைத்த இந்திய அணி! ஆனாலும் பாகிஸ்தானை முந்த முடியல!

ABOUT THE AUTHOR

...view details