சென்னை: இந்தியாவில் 17வது ஐபிஎல் சீசனின் லீக் சுற்று முடிவடைந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றானது இன்று தொடங்கவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது.
இந்த நான்கு அணிகளிலுமே தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது சுவாரஸ்யமான தகவலாக உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் யார்க்கர் புகழ் நடராஜனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கும் இடம் பெற்றுள்ளனர்.
வருண் சக்கரவர்த்தியை பொறுத்தமட்டில், 2019ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த தொடரில் தன் பந்து வீச்சீன் மூலம் அனைவராலும் கவரப்பட்டார். பின்பு, பஞ்சாப் கிங்ஸில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டு, 2020-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார். இந்த அணியிலும் தன் மாயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கச் செய்தார். 7 விதமான வேரியேசன்களில் பவுலிங் செய்யும் திறமை பெற்றுள்ள இவர், 2021ஆம் ஆண்டு இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார்.
பின்னர், இந்தியாவிற்காக இலங்கைக்கு எதிரான டி20-ல் களமிறங்கினார். தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-க்கு தன் பங்களிப்பினை அளித்துவரும் வருண் சக்கரவர்த்தி, நடப்பு சீசனில் 18 விக்கெட்டுகள் எடுத்து 8.83 எகானமியுடன் அசத்தி வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்கு இவரின் பங்களிப்பு இன்றியமையாதது.
யார்க்கர் நடராஜன்: அடுத்ததாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழக வீரரான நடராஜன் தன் துல்லியமான யார்க்கர் பந்து வீச்சால் ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, அதில் தன் முழுத் திறமையையும் வெளிகாட்டினார்.
பின்பு, 2018ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்த இவர், ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் தன் யார்க்கர் பந்து வீச்சின் மூலம் சிறந்த எகானமியுடன் போடக்கூடிய பவுலர் என்ற பெயரை பெற்றார். அதன் மூலம் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. தன் அறிமுக டி20 போட்டியில், 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்டுகள் எடுத்து 9.25 எகானமியுடன் தன் அணியை பிளே ஆஃப் நோக்கி கூட்டிக்கொண்டு வந்துள்ளதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.