சென்னை:இந்தியாவைப் பொருத்தவரை செஸ் போட்டி என சொன்னாலே தமிழ்நாடு தான் நினைவுக்கு வரும் ஏனென்றால் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் செய்துள்ள சாதனையை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக இந்தியாவில் உள்ள உள்ள 85 ஆண்கள் கிராண்ட் மாஸ்டர்களில் 29 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
அதே போல் 23 பெண்கள் கிராண்ட் மாஸ்டர்களில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் உள்ளனர். இதில் தற்போது ஆக்டிவ்வாக உள்ள முதல் 10 ஆண்கள் கிராண்ட் மாஸ்டர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பெண்களில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளது தமிழ்நாட்டை இந்திய அளவில் உயர்ந்து பார்க்க வைக்கிறது.
விஸ்வநாதன் ஆனந்த்:இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ராஜூவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட இந்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.இந்தியாவில் உள்ள இளம் செஸ் வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தான் காட்பாதராக உள்ளார்.
இதையும் படிங்க:பாலினத்தை மறைத்து பதக்கம் வென்றாரா இமானே கெலிப்! மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! பதக்கம் திரும்பப் பெறப்படுமா?
தமிழகத்தில் கிராண்ட்மாஸ்டர்கள் யார்?தமிழகத்தில் விஸ்வநாதன் ஆனந்த், சசிகிரண், ஆர்.பி.ரமேஷ், தீபன் சக்ரவர்த்தி, சுந்தர்ராஜன் கிடாம்பி, ஆர்.ஆர்.லட்சுமண், பி.மகேஷ் சந்திரன், எம்.ஆர்.வெங்கடேஷ், எஸ்.அருண் பிரசாத், பி.அதிபன், எஸ்.பி.சேதுராமன், எம்.ஷியாம் சுந்தர், வி.விஷ்ணு பிரசன்னா, கார்த்திகேயன் முரளி, வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம் மற்றும் அஸ்வின் ஜெயராம், கே.பிரியதர்ஷன், என்.நாத், ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ், பி.கார்த்திகேயன், என்.ஆர்.விசாக், பி.இனியன், ஜி.ஆகாஷ், ஆர்.வைஷாலி ஆகியோர் கிராண்ட்மாஸ்டராக உள்ளனர்.
மேலும், உலகிலேயே சகோதர சகோதரிகளாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற பெருமை தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி ஆகியோர் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ்:இன்று தொடங்கி இருக்கும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் கிளாசிக் தொடரின் இரண்டாவது சீசன் வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி தொடர் 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் (Round-Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் நடத்தப்பட உள்ளது.
இந்த தொடரில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் இடம்பெற்ற வீரர், வீராங்கனைகளான அர்ஜுன் எரிகேசி, விதித் குஜராத்தி, ஹரிகா துரோனவல்லி, வைஷாலி மற்றும் அரவிந்த் சிதம்பரம் ஆகிய பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றனர். மேலும் அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த தொடரில் வெற்றி பெறுபவர்கள் FIDE தொடரில் தகுதி பெற வாய்ப்பு உள்ளதால் வீரர்கள் வெற்றிபெறும் முனைப்பில் விளையாடி வருகின்றனர்.