பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த ஜுலை 26ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் குண்டு எறிதில் பிரிவில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் கால்ந்து கொண்டார். முதலில் நடந்த தகுதிச் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்த தஜிந்தர்பால் சிங் 15வது இடம் பிடித்தார்.
ஒட்டுமொத்தமாக தஜிந்தர்பால் சிங் 29வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தரவரிசையில் கடைசிக்கு முந்தைய இடத்தை பிடித்ததால் குண்டு எறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற்றப்பட்டார். இதனால் பாரீஸ் ஒலிம்பிக் குண்டு எறிதலில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது.
தரவரிசையில் முதல் 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர். தகுதிச் சுற்றில் 21.35 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிதல் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை வீரர்கள் பெற முடியும். அதன்படி முதல் சுற்றில் 15வது இடம் பிடித்த தஜிந்தர்பால் சிங் அடுத்த சுற்றுகளில் சொதப்பி ஒட்டுமொத்தமாக 29வது இடத்தை பிடித்து வெளியேறினார்.
பாரீஸ் ஒலிம்பிக் குண்டு எறிதலில் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) நடைபெறுகிறது. முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு தொடரிலும் தஜிந்தர்பால் சிங் விளையாடி இருந்தார். அப்போதும் பதக்க வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய சாதனையாளரான தஜிந்தர்சிங் பால் கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2018ஆம் ஆண்டு ஜாகர்தாவில் நடைபெற்ற ஆச்சிய போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒலிம்பிக் குண்டு எறிதலில் முதல் சுற்றில் 18.05 மீட்டர் தூரத்திற்கு எறிந்த தஜிந்தர்பால் சிங் அடுத்த இரண்டு முயற்சிகளில் பவுல் செய்ததால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார். அதேபோல் பாரீஸ் ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவை பிரிநிதித்துவப்படுத்திய ஒரே வீரர் தஜிந்தர்பால் சிங் தான். அவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனதால் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவு கலைந்து போனது.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் 8வது நாளில் இந்தியா பதக்கம் வெல்லுமா? முழு விபரம்! - Paris Olympics 2024