கயனா: 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளான இன்று (ஜூன்.2) காலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய அமெரிக்கா அணி 17 புள்ளி 4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - பப்புவா நியூ கினியா நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பப்புவா நியூ கினியா அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கக் கூடிய அணி தான். கத்துக்குட்டி அணியான பப்புவா நியூ கினியா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்குமா என்பது பெரும் சந்தேகம் தான்.
தென் அமெரிக்க நாடான கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த மாதம் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது.
அதேபோல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 257 ரன்கள் குவித்ததுடன் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த உற்சாகத்துடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களம் இறங்கும் அதேநேரம் உள்ளூர் சூழல் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதால் இன்றைய ஆட்டம் பெரும்பாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதமாகவே அமையுன் என எதிர்பார்க்கப்படுகிறது.