சென்னை:நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 46-வது லீல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.
நடப்பு சீசனில் பவுலர்களுக்கான இடமே இல்லாமல் போய்விட்டதே ஏன்?"அப்படிச் சொல்ல முடியாது. ஐபிஎல் தொடர் என்பது வெறும் 2 மாதங்கள் நடக்கிறது. அதையும் தாண்டி நிறைய கிரிக்கெட் போட்டிகள் இருக்கிறது. இங்கே நிறையா ப்ளாட் பிட்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை உள்ளதால் கூடுதல் பேட்ஸ்மேன்களை பயன்படுத்துகிறார்கள்.இது பந்து வீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களுக்கு மிக உதவியாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படலாம். இந்த நிலைமை அடுத்த சீசனில் கூட மாற்றம் செய்யப்படலாம்" என்றார்.
உலகக் கோப்பை இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படுவரா?"நடராஜன் ஒரு சிறந்த பிளேயர். ஆனால் அவர் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் போதுதான் அவரை பற்றிப் பேசுகிறார்கள், மற்ற நேரங்களில் அவரை மறந்துவிடுகிறார்கள்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அவருக்கு சில காயங்கள் இருந்தது. இந்த சீசனில் அவர் முழு உடல் தகுதியுடன் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம் பெறுவாரா? என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது.