காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டியை மர்ம நபர் சாதாரணமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெண்மணி கொடுத்த புகாரின் பெயரில் காஞ்சிபுரம் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீரை மண்டபம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் குமார். இவரது மனைவி காமாட்சி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காமாட்சி நேற்று மாலை வீட்டு வாசலில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி வைத்துள்ளார். இன்று (பிப்.17) காலை பணிக்கு செல்வதற்காக வாகனத்தை எடுக்க வெளியே வந்து பார்த்தபோது அங்கு ஸ்கூட்டி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து வீட்டின் அருகாமையில் உள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்துள்ளார். அப்போது நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை திருடி சென்றது தெரிய வந்தது. பின்னர் காமாட்சி சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் காவலரிடம் செயின் பறிப்பு! 'தர்ம அடி' வாங்கிய போதை ஆசாமி!
காஞ்சிபுரம் மாநகரில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களை திருடி செல்லும் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணிகளை அதிகரித்து வாகன திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.