பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் போல் வால்ட் போட்டியில் சுவீடன் -அமெரிக்க விளையாட்டு வீரர் மோன்டோ டுபிளான்டிஸ் தனது முந்தைய உலக சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார். பாரீஸ் ஒலிம்பிக் போல் வால்ட் விளையாட்டில் 6.25 மீட்டர் உயரம் தாண்டி அவர் உலக சாதனை படைத்தார்.
முன்னதாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி போல் வால்ட்டில் 6.10 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்து இருந்தார். தற்போது தனது முந்தைய சாதனையை மோன்டோ டுபிளான்டிஸ் மீண்டும் முறியடித்து உள்ளார். இதன் மூலம் உலக வரலாற்றில் தனது சாதனை 9வது முறையாக முறியடித்து புது மைல்கல்லை படைத்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த உலக போல் வால்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோன்டோ டுபிளான்டிஸ் முந்தைய உலக சாதனையை 8 முறை முறியடித்து இருந்தார். இந்நிலையில் 4 ஆண்டுகள் இடைவெளியில் தனது முந்தைய சாதனையை 9வது முறையாக முறியடித்து புது உலக சாதனை படைத்து உள்ளார் மோன்டோ டுபிளான்டிஸ்.
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் போல் வால்ட் போட்டியில் கலந்து கொண்ட மோன்டோ டுபிளான்டிஸ் தனது முதல் முயற்சியில் பவுல் செய்தார். அதன் பின் ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் நடைபெற்றதால் சிறிது நேரத்தில் போல் வால்ட் போடி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்ட மோன்டோ டுபிளான்டிஸ், 2வது முயற்சியிலும் பவுல் செய்தார்.
தொடர்ந்து இரண்டு முறை பவுல் செய்ததால் அவர் மீது அதிக அழுத்தம் ரசிகர்களால் எழுந்தது. தொடர்ந்து மூன்றாவது முயற்சியில் 6.25 மீட்டர் உயரத்திற்கு தாண்டி புது உலக சாதனை படைத்தது மட்டுமின்றி தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். தொடர்ந்து மோன்டோ டுபிளான்டிஸ் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 6.10 மீட்டர் அளவுக்கு உயரத்தை தாண்டி மோன்டோ டுபிளான்டிஸ் தங்கப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 24 வயதான அமெரிக்கா -சுவீடன் குடியுரிமை பெற்ற மோன்டோ டுபிளான்டிஸ் தனது சொந்த நாட்டுக்காக மீண்டும் ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை வென்று தந்து வரலாறு படைத்து உள்ளார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக் பேட்மிண்டன்: நூலிழையில் கைநழுவிய பதக்கம்! - Paris Olympics 2024