சென்னை: ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று முடிந்தன. அந்த வகையில், இறுதிப் போட்டியில் இன்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா வெறும் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், ராகுல் திரிபாதி களம் காண, டிராவிஸ் ஹெட் சொற்ப ரன்னில் அவுட் ஆனார். இரண்டு ஓவர்களில் ஹைதராபாத் அணிக்கு 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது.
3வது ஓவரில் முதல் பந்தில் திரிபாதி பவுண்டரியை விளாசினார். இதுவே அணிக்கு முதல் பவுண்டரி ஆகும். பின்னர், மார்க்ராம் பவுண்டரி விளாசினார். இருவரும் ஜோடி போட்டு விளையாடுவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திரிபாதி வெறும் 9 ரன்களுக்கு அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பவர் ப்ளே கடைசி ஓவரில், ஹைதராபாத் அணிக்கு 17 ரன்கள் குவிந்தன. 6 ஓவர் முடிவிற்கு 40 - 3 என்ற கணக்கில் விளையாடியது.
7வது ஓவரில் நித்திஷ் ரெட்டி அவுட் ஆக கிளாசன் களம் கண்டார். 10 ஓவர் முடிவிற்கு 61 - 4 என்ற கணக்கில் ஹைதராபாத் அணி விளையாடியது. மார்க்ராம் 11வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 5 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி திணறியது.