ஐதராபாத்:பணம் கொழிக்கும் விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் கிரிக்கெட் கடந்த 2023 நிதி ஆண்டுக்கு பின் ஏறத்தாழ 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை வருவாயை இழந்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம், ஐபிஎல் அணிகள் கடந்த சீசனில் கணிசமான அளவில் வருவாயை ஈட்டி உள்ளன.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு பின்னர் பிசிசிஐயிடம் இருந்து அணிகள் ஏறத்தாழ 4 ஆயிரத்து 670 கோடி ரூபாய் வரை பெற்றதாக கூறப்படுகிறது. அதேநேரம் 2022ஆம் ஆண்டில் பிசிசிஐயிடம் இருந்து அணிகள் 2 ஆயிரத்து 205 கோடி ரூபாய் வரை மட்டுமே பெற்று உள்ளன. ஒரு சீசனுக்குள் பிசிசிஐயுடனான அணிகளின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் அணிகளின் தனிப்பட்ட வருவாயும் கடந்த காலங்களை காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மும்பை அணி 2023 நிதி ஆண்டில் 358 கோடி ரூபாய் வரை ஈட்டிய நிலையில், 2024ஆம் ஆண்டு அது 737 கோடி ரூபாயாக இரண்டு மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல் 5 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருவாயும் 292 கோடி ரூபாயில் இருந்து 676 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருவாய் 4 மடங்கு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் அடுத்ததாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கணிசமாக வருவாயை ஈட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணி 222 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் மொத்தம் 650 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2024 ஐபிஎல் சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி இதுவரை எந்த அணியும் கண்டிராத வகையில் 138 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது.
2024ஆம் ஆண்டு சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் வருவாய் 138 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் மட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரிலும் அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதன் காரனமாக அந்த அணியின் வருவாய் எதிர்பாராத வகையில் அசூர வளர்ச்சியை கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம், அணிகள் நல்ல வருவாய் ஈட்டிய போதும், ஐபிஎல்லின் மதிப்பு கடந்த சீசனில் 11.7 சதவீதம் வரை குறைந்ததாக சொல்லப்படுகிறது. தொலைகாட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற டிஸ்னி மற்றும் வியாகாம் 18 நிறுவனங்கள் விரைவில் ஒன்றிணைவதுதான் இந்த திடீர் மதிபிழப்புக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
மேலும், ஒளிபரப்பு நிறுவனங்களின் ஒன்றிணைப்பு காரணமாக ஐபிஎல் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் இருந்து 82 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏறத்தாழ 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை கடந்த சீசனில் மட்டும் ஐபிஎல் நிர்வாகத்திற்கு இழப்பு எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பெங்களூருவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கோவா! - ultimate table tennis 2024