கொழும்பு:இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில் அதில் இந்திய அணி 3-க்கு 0 என்ற கணக்கில் வென்று இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (ஆக.2) தொடங்குகிறது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார்.
டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மீண்டும் ஒரு தொடரில் களம் காணுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கேஎல் ராகுல் மீண்டும் அணியில் இணைந்து உள்ளார். டி20 பார்மட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலியும் சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடன் இணைந்து உள்ளார்.
நட்சத்திர பட்டாளமே இந்திய அணி மீண்டும் ஒன்று கூடி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதேநேரம், இலங்கை அணியும் டி20 கிரிக்கெட் தொடரில் கண்ட தோல்விக்கு பழிதீர்க்க முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக தனது 100வது வெற்றியை பதிவு செய்யும்.