சென்னை: தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவு பெற்றது. இப்போட்டியில், இந்தியாவில் இருந்து 62 வீரர்களும், இலங்கையில் இருந்து 54 வீரர்களும், பாகிஸ்தானில் இருந்து 12 வீரர்களும், பூட்டானில் இருந்து 5 வீரர்களும், நேபாளில் இருந்து 9 வீரர்களும், பங்களாதேஷில் இருந்து 16 வீரர்களும் மற்றும் மாலத்தீவில் இருந்து 15 வீரர்கள் என தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் கலந்துகொண்ட 62 பேரில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆவர். இந்நிலையில், இப்போட்டி நேற்று நிறைவு பெற்ற நிலையில், 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை வென்று இந்தியா முதலிடம் பிடித்தது.
30 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 21 போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா. தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் 5 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றனர். இந்திய அணியில் ஆண்களை விட பெண்களே அதிக பிரிவுகளில் பதக்கங்களை வென்று அசத்தினர். தமிழக வீராங்கனை அபிநயா 2 தங்க பதக்கங்களை வென்று அசத்தினார்.
ஒட்டுமொத்த சாம்பியனுக்கான பட்டத்தில் முதல் பரிசை இந்தியாவும், இரண்டாவது பரிசை இலங்கையும், மூன்றாவது பரிசை வங்கதேசமும் வென்றது. பாகிஸ்தான் மற்றும் பூடான் இறுதி வரை ஒரு பதக்கம் கூட வெல்லாமல் நாடு திரும்புகின்றனர்.