சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் இன்று (ஜனவரி 09) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையை பார்க்கும் பொழுது 23ஆம் புலிகேசி படத்தை பார்ப்பது போன்று உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் இன்று (ஜனவரி 09) வந்தார். அங்கு, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “காமெடி நடிகர் வடிவேலின் இடத்தை செல்வப்பெருந்தகை பிடித்து விட்டார்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் உயர்த்தப்படுமா..? சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையை பார்க்கும் பொழுது 23ஆம் புலிகேசி படத்தை பார்ப்பது போன்று உள்ளது. குறிப்பாக, திமுகவின் கூட்டணி கட்சிகள் பேசும்போது, 23ஆம் புலிகேசி மன்னனை சுற்றி அமர்ந்து கொண்டு, மனுநீதி சோழன் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறுவது போன்று உள்ளது. இவர்கள் அனைவரும் உண்மையாகவே மக்களை சந்திக்கிறார்களா? வீதிக்கு வருகிறார்களா? என்ற மக்களின் கருத்தை பார்க்க வேண்டும்.
மேலும், பல்லடம் பகுதியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கும் நிலையில், தமிழக அரசை கண்டித்து நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் செல்கிறேன்” என்று கூறினார்.