ஹைதராபாத்:2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் 18வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் ,இதற்கான பட்டியலை சமர்ப்பிப்பதற்கு இன்று (அக்.31) மாலை 5 மணி வரை ஐபிஎல் நிர்வாகம் காலம் வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ரிடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளன. அதன்படி, ஆர்சிபி அணிக்காக இந்திய அணியின் 3 வீரர்கள் ரிடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.21 கோடிக்கும், இளம் வீரர் ரஜத் பட்டிதர் ரூ.11 கோடிக்கும், அன்-கேப்ட் வீரரான யாஷ் தயாள் ரூ.5 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களான டூ பிளசிஸ், கிளென் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ், முகமது சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:2025 சீசனில் களமிறங்கும் தோனி.. சிஎஸ்கேவில் தக்க வைக்கப்பட்டுள்ள மற்ற வீரர்கள் யார்?
இருப்பினும், மெகா ஏலத்தின் போது ஆர்சிபி அணியால் 3 வீரர்களுக்கு ஆர்டிஎம் கார்டினைப் பயன்படுத்த முடியும். இந்த 3 வீரர்களை ரீடெய்ன் செய்ததன் மூலமாக, ஆர்சிபி அணிக்கு ஒதுக்கப்பட்டு இருந்த 120 கோடியில் ரூ.37 கோடி கழிக்கப்பட்டுள்ளது. அந்த அணியிடம் மீதம் 83 கோடி உள்ளது, இதன் மூலம் வலுவாக மொகா ஏலத்தில் பங்கேற்க முடியும்.
அதிக விலை:ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் அணியில் அதிகபட்ச விலைக்கு தக்கவைக்கப்பட்ட 2வது வீராரகாவும் விராட் கோலி வலம் வருகிறார். அதேபோல், வரும் 2025 ஐபிஎல் தொடரில் விராட் கோலி மீண்டும் களமிறக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்த அணி நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மெகா ஏலத்திற்குப் பின்னரே இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணியில் ராகுல்:கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல், அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் வரும் மொகா ஏலத்தில் அவர் பங்கேற்பார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராகுல் இதற்கு முன் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார். இதனால் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.