நியூ யார்க்:டென்னிஸ் விளையாட்டின் உயரிய அந்தஸ்துகளில் ஒன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகள். ஆண்டுக்கு மொத்தம் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஆண்டு தொடக்கமான ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறுகின்றன.
அதைத் தொடர்ந்து மே மாத இறுதியில் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும் அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். இறுதியில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெறும். சினிமா கலைத்துறைக்கு ஆஸ்கர் விருது போல் டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்வது என்பது உயரிய விருதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் தற்போது நியூ யர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வீரர் ரோகன் போபன்னா, இந்தோனேஷியாவின் அல்டிலா சுட்ஜியாடி என்பவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
ரோகன் போபன்னா - அல்டிலா சுட்ஜியாடி இணை கால் இறுதியில் மேத்யூ எப்டன் - பார்போரா கிரெஜிகோவா ஜோடியை எதிர்கொண்டனர். தொடக்க செட் முதலே ஆட்டம் கடினமானதாக இருந்தது. வெற்றிக்காக இரண்டு ஜோடிகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். இருப்பினும் முதல் செட்டை ரோகன் போபன்னா -அல்டிலா சுட்ஜியாடி இணை டை பிரேக்கரில் 7-க்கு 6 என்ற கணக்கில் கைப்பற்றினர்.
தொடர்ந்து இரண்டாவது செட்டை 2-க்கு 6 என்ற கணக்கில் போபன்னா ஜோடி கோட்டை விட்டது. இதனால் இறுதி செட் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. கடும் போராட்டத்திற்கு பின் ரோகன் போபன்னா - அல்டிலா சுட்ஜியாடி10-க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றனர்.
ஏறத்தாழ 1 மணி நேரம் 33 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 7-க்கு6, 2-க்கு 6, 10-க்கு 7 என்ற செட் கணக்கில் ரோகன் போபன்னா அல்டிலா சுட்ஜியாடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த இணை அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அரைஇறுதியில் இந்தியா- இந்தோ இணை அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் - டொனால்ட் யங் ஜோடியை நாளை (செப்.4) எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க:ஒரே நாளில் 8 பதக்கம்.. பாராலிம்பிக்ஸ்சில் வரலாறு படைத்த இந்தியா! - paris paralympics 2024