கோயம்புத்தூர்: உடையாம்பாளையம் பகுதியில் ரவிகுமார் - ஆபிதா தம்பதி தள்ளுவண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி ஆகியவை விற்பனை செய்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பாஜக ஓபிசி பிரிவு மாநகர் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, இப்பகுதியில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இருதரப்பினரும் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, பீப் கடைக்காரர்கள் கூறுகையில், “கோயில் இருக்கும் பகுதியில் பீப் கடை வைக்கக்கூடாது என்கின்றனர். ஆனால் இங்கு மீன், சிக்கன் என அசைவ கடைகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பீப் மட்டும் கோயிலுக்கு ஆகாதாம், கடையை காலி செய்யச் சொல்கின்றனர்” என்றனர்.
அதைத் தொடர்ந்து பேசிய பாஜக நிர்வாகி சுப்பிரமணி, "கோயில் பகுதி என்பதால் பொதுவாக அனைத்து இறைச்சிக் கடையும் நீக்கக் கூறினோம். இது எங்கள் ஊர் கட்டுப்பாடுகளில் ஒன்று. இந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது" என்றார். இந்நிலையில், பீப் கடை வைத்துள்ள தம்பதியினருக்கு ஆதரவாக பல்வேறு திராவிட அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி மீது புகார் அளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தம்பதியும் பாஜக நிர்வாகி சுப்பிரமணி மற்றும் ஆறு அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை மிரட்டியதாகக் கோவை மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து நேற்று (ஜனவரி 9) காலை புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில், துடியலூர் காவல்துறையினர் பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது வெறுப்பைத் தூண்டுதல், மிரட்டுதல் உள்ளிட்ட (C6 PS CRNO 8/2025 U/S 126(2), 192, 196 and 351(2) of BNS, 2025 ) நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “இந்த பகுதியில் பீப் பிரியாணி கடை இருக்க கூடாது”- வைரலான வீடியோ காட்சி... நடந்தது என்ன?
இந்த நிலையில், பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டம் நடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் தேவநாதன் பொதுமக்களைச் சந்தித்தும், சுப்பிரமணியின் தாயாரைச் சந்தித்தும் முறையாக சட்டப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து ஊர் மக்கள் சாலை மறியலைக் கைவிட்டுச் சென்றனர்.
இதற்கிடையே, சுப்பிரமணியின் வீட்டின் உள்ளே சில நபர்கள் சென்று தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், வீட்டில் உள்ள பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும் அவரது தாயார் துணை ஆணையாளரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டில் காவல்துறையினர் சென்று சோதனை மேற்கொண்டு உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
அப்போது, துணை ஆணையாளரிடம் கோயிலைச் சுற்றி அசைவ கடைகள் வைக்கக்கூடாது, சுப்பிரமணியன் மீது பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், சுப்பிரமணியன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை அப்பகுதி முன் வைத்துள்ளனர்.