ஐதராபாத்:18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடருக்கு முன்பாக வீரர்கள் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக மெகா ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களை பட்டியலை வெளியிட வேண்டும். அதன்படி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று மொத்தம் உள்ள 10 அணிகளும் தங்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்ட 46 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
தக்கவைப்பு வீரர்கள் பட்டியல்:
முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் அதிகபட்சம் 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆர்டிஎம் விதிமுறையின் கீழ் இரண்டு வீரர்களை தக்கவைக்க அணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷ பத்திரனா, எம்.எஸ் தோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 2025 ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டது. எம்.எஸ் தோனி 4 கோடி ரூபாய் ஊதியத்திற்கு அன்கேப்டு பிளேயராக சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டார். அதேநேரம் 2026 ஐபிஎல் சீசனில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்றால் சந்தேகம் தான்.
2026ல் விளையாடுவாரா தோனி?:
இந்நிலையில், தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணியில் விக்கெட் கீப்பிங் பொறுப்பை கவனிக்க நல்ல வீரரை சென்னை அணி நிர்வாகம் தேடி வருகிறது. நல்ல அனுபவம் வாய்ந்த வீரராகவும், கேப்டன் இல்லாத சமயத்தில் அணியை வழிநடத்திச் செல்லக் கூடிய நபராகவும் அவர் இருக்க வேண்டும் என சென்னை அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல் கூறப்படுகிறது.
தோனிக்கு அடுத்தபடியாக சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் மாற்று வீரரை சென்னை நிர்வாகம் வலைவீசி தேடி வருகிறது. இந்நிலையில், தோனியின் இடத்திற்கு அடுத்ததாக தேர்வு செய்ய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ள வீரர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த விக்கெட் கீப்பர் யார்?:
எம்.எஸ் தோனிக்கு பின் சென்னை அணியின் பிரதான விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட்டை தேர்வு செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அணியில் இருந்து ரிஷப் பன்ட் கழற்றி விடப்பட்ட நிலையில், அவர் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில், ஏலத்தில் வைத்து ரிஷப் பன்ட்டை அதிக தொகை கொடுத்தாவது விலைக்கு வாங்க சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்திய அணியில் தோனியின் ஓய்வுக்கு பின்னர் அவரது இடத்தை ரிஷப் பன்ட் பூர்த்தி செய்தார். அதேபோல் சென்னை அணியிலும் தோனிக்கு மாற்றாக ரிஷப் பன்ட் இருப்பார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வெளியானது ஐபிஎல் மெகா ஏலம் தேதி! எப்ப தெரியுமா? IPL Mega Auction Date!