ஹைதராபாத்:9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி(ICC Men's T20 World Cup), கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்கா மற்றும் வெஸ்இண்டீசில் நடைபெற்று வந்த நிலையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிபோட்டி நேற்று நடைபெற்றது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 176 ரன்களை எடுத்தது.
177 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டு இழப்புக்கு, 169 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. கடந்த ஓராண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை ஆட்டங்களில் இறுதிபோட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, இம்முறை கோப்பையை தட்டி பறித்தது. இதைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடினர்.
டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில், “டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். சாகாத மனநிலையுடன் கடினமான சூழ்நிலையில், பயணம் செய்த அணி, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியது. இறுதி போட்டியில் இது ஒரு அசாதாரண வெற்றியாகும். இந்திய அணியால் பெருமை அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.