தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"உங்களால் இந்தியா பெருமையடைகிறது" வெண்கலம் வென்ற அமனுக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து! - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

பாரீஸ் ஒலிம்பிக் 57 கிலோ ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அமன் ஷெராவத்க்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.

அமன் ஷெராவத், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி
அமன் ஷெராவத், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி (Credit - AP and ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 10:18 AM IST

பாரீஸ்:ஒலிம்பிக் தொடரில் இந்தியா தனது 6வது பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. மல்யுத்தத்தில் 57 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் இளம் நட்சத்திர வீரர் அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளிகள் கணக்கில் டேரியன் க்ரூஸை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

பதக்கம் வென்ற பிறகு அமன் ஷெராவத் கூறுகையில், "ஒலிம்பிக்கில் நாட்டிற்காகப் பதக்கம் வென்று உள்ளேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தங்கம் வெல்ல வேண்டும் என எதிர்பார்த்தேன் ஆனால் வெண்கலம் வென்றதும் மன மகிழ்ச்சியாக்கத்தான் உள்ளது. இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என்னுடைய அடுத்த இலக்கு 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராவதாகும்" என்றார்.

21 வயதாகும் அமன், தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அமனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர்:இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மல்யுத்த போட்டியில் குறைந்த வயதில் உங்களுடைய முதல் பதக்கத்தை வென்றுள்ளீர்கள். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கங்களை வெல்லும் பாரம்பரியத்தை இந்தியா தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர்:"உங்களின் தளராத அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உலக அரங்கில் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளது. உங்கள் எதிர்கால முயற்சிகள் எங்களுடைய வாழ்த்துகள்" என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி:வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு வாழ்த்துகள். அவருடைய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தெளிவாகத் தெரிகிறது. இந்த அற்புதமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது" என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி:அமன் ஷெராவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது ஆறாவது பதக்கத்தை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. நமது ஒலிம்பிக் அணியின் செயல்திறனால் ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் அடைகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"தமிழ்நாட்டில் இருந்தே எனது ஹாக்கி பயணம் தொடங்கியது" - இந்திய ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் நெகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details