பாரீஸ்:பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தையம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 2023ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் தங்கம் வென்ற பரூல் சவுத்ரி, அங்கிதா தயானி ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் டாப் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தையத்திற்கான இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
ஹீட் பிரிவில் இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு முயற்சியிலும் 20 வீராங்கனைகள் ஓடுவர். இந்த பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகள் பரூல் சவுத்ரி மற்றும் அங்கிதா தயானி முறையே 24வது மற்றும் 40வது இடத்தை பிடித்தனர். முதல் ஹூட் முயற்சியில் பரூல் சவுத்ரி பந்தைய தூரத்தை 15:10.68 மணி நேரத்தில் கடந்து 14வது இடத்தை பிடித்தார்.
மேலும், 15 நிமிடம் 10.35 விநாடிகளில் தேசிய சாதனை படைக்க வேண்டிய முயற்சியை நூலிழையில் தவறவிட்ட பரூல் சவுத்ரி, டாப் 8 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தார். அதேபோல் இரண்டாவது ஹீட் சுற்றில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீராங்கனை அங்கிதா தயானி, 16:19:38 நிமிடங்களில் பந்தைய தூரத்தை கடந்து 20வது இடத்தை பிடித்தார்.
இரண்டாவது ஹீட் சுற்றில் அங்கிதா தயானி மட்டும் 16 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், மற்ற வீராங்கனைகள் அனைவரும் 15 நிமிடங்களுக்குள் பந்தையத்தை நிறைவு செய்தனர். இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இருவரும் தவறவிட்ட நிலையில், 5 ஆயிரம் மீட்டர் தடகளத்தில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு கலைந்தது.