மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடந்த நவம்பர் 7ஆம் நாள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் எனும் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமத்தை எடுப்பதற்கான அனுமதியை, தமிழ்நாட்டில் முதல் பல்லுயிர் பாதுகாப்பு தளம் அமையப்பெற்ற அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் பகுதியை உள்ளடக்கி 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அனுமதி வழங்கியது.
இதையறிந்து மேலூர் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். பொதுமக்களின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட மாநில திமுக அரசு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது. ஒன்றிய பாஜக அரசும் பல்லுயிர் தளம் அமைந்துள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கரை தவிர்த்து திட்டத்தை மறு ஆய்வு செய்வதாகக் கூறி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பில் இருந்த சூழ்ச்சியை உணர்ந்து கொண்ட மக்கள் இந்த திட்டத்தை முழுமையாக கைவிடாமல் மறு ஆய்வு அல்லது மறு வரையறை என்பதானது ஏமாற்று வேலை அதை தாங்கள் ஏற்க இயலாது என்று உறுதிபடக் கூறி, கடந்த ஜனவரி 7ஆம் தேதி முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த மேலூர் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தமுக்கம் தலைமை தபால் அஞ்சலகம் வரையிலான நடைப்பயணத்தில், லட்சக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு ஒரு கட்டுக்கோப்பான வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தி காட்டினார்.
அதன் பிறகு டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் உள்ளிட்ட பல்வேறு வடிவ போராட்டங்களை மேலூர் பகுதி மக்கள் கடைப்பிடித்து தங்கள் எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தனர்.
ஒன்றிய பாஜக அரசினை நோக்கி டங்ஸ்டன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்த சூழலில் அ.வல்லாளப்பட்டியில் மக்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் போராடும் மக்களை நேரில் அழைத்து ஒன்றிய அரசு திட்டம் தொடர்பான நல்ல முடிவை அறிவிக்க இருக்கிறது என்று கூறி சென்றார். இதையடுத்து நேற்று ஜனவரி 21 ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்திப்பதற்காக 8 பேர் அடங்கிய ஒரு குழுவை பாஜகவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இப்பகுதி மக்களிடம் சந்தித்து பேசிய பொழுது, "இந்த டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதைத் தவிர வேறு எந்த சமரசத்தையும் தாங்கள் ஏற்க மாட்டோம் எனவும், திட்ட ரத்து செய்யப்படுவதை எழுத்துப்பூர்வமாக அரசாணை வடிவில் எங்களுக்கு அளித்தால் மட்டுமே, கடந்த மாத காலமாக அன்றாட வேலைகளை துறந்து, ஊண் உறக்கமின்றி போராடிய லட்கணக்கான மக்களின் போராட்டத்திற்கான உண்மையான வெற்றியாக இருக்கும்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய விவகாரம்: மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு
இந்த உணர்வுளை புரிந்து ஒன்றி அரசு நடந்து கொள்ளவேண்டும். அதைவிடுத்து வெறுமனே வாயால் தரும் வாக்குறுதிகளை நம்புவதற்கு தாங்கள் தயாராக இல்லை. எனவே, ஒன்றிய அரசு இந்த டங்ஸ்டன் சுரங்கம் என்னும் நாசகார திட்டத்தை முழுமையாக ரத்து செய்து அதற்கான அரசாணையை வெளியிடுவதோடு, அதை அரசிதழிலும் வெளியிடுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும், அப்படி செய்வதை மட்டுமே ஏற்போம் மற்ற வாய்வழி வாக்குறுதிகளை நம்பமாட்டோம். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மக்களின் இந்த உணர்வுகளுடம் முழுமையாக உடன்பாடு கொள்கிறது.
மேலும் இந்தத் திட்டத்தை ஏற்கனவே ஏலம் விடப்பட்ட ஐந்தாயிரம் ஏக்கர் தவிர்த்து டங்ஸ்டன் ஆய்வுகள் நடந்துள்ள மேலவளவு, கச்சிராயன்பட்டி, கம்பூர், கருங்காலக்குடி, வஞ்சிநகரம் உள்ளடங்கிய மற்ற பகுதிகளில் நடைமுறைப்படுத்திட முயற்சி செய்கிறதோ என்ற அச்சமும் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பிற்கு உள்ளது.
எனவே இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதை தவிர்த்து வேறு எந்த வடிவிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுமானால் மக்கள் போராட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இணைந்து அனைத்து விதமான போராட்டங்களிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.