சென்னை: நொளம்பூரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்க வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் மத்தியில் மேடையில் பேசிய மனு பாக்கர், "கடுமையான உழைப்பு இருந்தால் பெரிதாக சாதிக்கலாம், பெரிய கனவு காண்பது மூலம் பெரிய இலக்கை அடையளாம்.
Manu Bhaker Press Meet in Chennai (Video Credit: ETV Bhart Tamil Nadu) நாம் தோல்வியிலும் தளராமல் இருக்க வேண்டும். பள்ளி காலத்தில் போட்டியில் கலந்து கொள்ள தொடங்கினேன். முதலில் வீட்டிலும் அடுத்து பள்ளியிலும் நமக்கு ஆதரவு கிடைக்க வேண்டும், அது எனக்கு கிடைத்தது. பொதுவாகவே நிறையா வேலை வாய்ப்பு உள்ளது, டாக்டர், என்ஜினியர் மட்டுமே படிப்பு அல்ல, அதை தாண்டி நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக விளையாட்டு துறையிலும் வேலை வாய்ப்பு உள்ளது, உலகம் சுற்ற ஆசை படுபபவர்கள் விளையாட்டு துறையயை தேர்வு செய்யுங்கள், பாதி உலகத்தை நான் சுற்றி விட்டேன். எப்போதும் நமது பின்புலம் பற்றி அவமானப்பட வேண்டாம், நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல, எனக்கு ஆங்கிலம் பேச தெரியாது, பல விசயங்கள் தெரியாமல் இருந்தேன், பிறகு கற்று கொண்டேன்.கற்று கொடுத்தார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட போது மிகவும் பதற்றமடைந்தேன். சுயநம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை புறந்தள்ளி வெற்றி பெற வேண்டியிருந்தது. தோல்விகள் பல அடைந்ததால் தான் என்னால் வெற்றி அடைய முடிந்தது" என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பு:
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இந்திய வீராங்கனை மனு பாக்கர், உங்கள் வெற்றிக்கான காரணம் என்ன என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "ஒரு நபர் மட்டுமே எனது வெற்றிக்கு பொறுப்பானவராக இருக்க முடியாது. எனது குடும்பம், பயிற்சியாளர் பால், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பலரின் பங்களிப்பு, நம் நாட்டிற்கு பதக்கம் கிடைக்க மிகப் பெரிய காரணமாக இருந்தது. இன்னும் பல ஆண்டுகள் நீண்ட பயணம் உள்ளது" என்றார்.
ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் மற்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கி இருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "ஆம் பல நாடுகள் நம்மை விட முன்னிலை வகிக்கின்றன. நாம் அனைவரும் பதக்கப் பட்டியலை உயர்த்தும் நம்பிக்கையுடன் இருப்போம். மற்ற நாடுகளிடம் ஒன்று உள்ளது, அவர்கள் குழந்தைகளை இளவயதிலேயே விளையாட்டு துறையில் முன்னோக்கி செல்ல செய்கிறார்கள். நம் நாட்டிலும் அந்த வகையான திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும், அதுவே சிறந்ததாக இருக்கும்" என்று கூறினார்.
தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய மனு பாக்கர், "பெண்களைப் பற்றிப் பேசினால், பெண்கள் நம் நாட்டின் 50 சதவீத மக்கள் தொகையை உருவாக்குகிறார்கள். அடிப்படை உரிமை என்பது சுதந்திரத்தின் அடிப்படையில் தான் கிடைக்கிறது. பெண்களுக்காக சமூகத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல் பட வேண்டும். ஒவ்வொரு நபரின் கடமையாக இது இருப்பது அவசியம். நாம் அனைவரும் இணைந்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நாம் முன்னேற்ற பாதையில் உள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும் வினேஷ் போகத் குறித்து பேசிய மனு பாக்கர், "அவர் எனக்கு அக்கா போன்ற மரியாதையானவர், அவரிடம் எனக்கு நல்ல மரியாதை உள்ளது, என்னை விடவும் வயதில் பெரியவர். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன். அவர் எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர். அவர் மீள்வதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார்" என்று பேசினார்.
இறுதியாக அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் தற்போது ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனது தோளில் சுமையை குறைத்து, மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளேன். 4 அல்லது 5 மாதங்கள் கழித்து மீண்டும் எனது பணியை துவங்குவேன்" என்று மனு பாக்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"மு.க.ஸ்டாலினை தெரியாது.. விஜயை நல்லா தெரியும்.."- துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர்! - Manu Bhaker