பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் நேற்று 9வது நாளில் இந்தியாவிற்கு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. இந்தியாவுக்கான இரண்டு பெரிய பதக்கப் போட்டியாளர்களான லவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை) மற்றும் லக்சயா சென் (பேட்மிண்டன்) ஆகியோர் அந்தந்த போட்டிகளில் தோல்வியடைந்தனர்.
இந்திய ஹாக்கி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி 10வது நாளில் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டிகள் குறித்து காணலாம்.
துப்பாக்கிச் சுடுதல்: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் 10வது நாளில் இந்தியாவுக்கான ஸ்கீட் கலப்பு அணி தகுதிப் போட்டியில் அனந்த் ஜீத் சிங் நருகா மற்றும் மகேஸ்வரி சவுகான் ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் மொத்தம் 15 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.
அனந்த் ஜீத் சிங் நருகா மற்றும் மகேஸ்வரி சவுகான் ஆகியோர் விளையாடும் ஸ்கீட் கலப்பு அணி தகுதி போட்டி இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு நடைபெறுகிறது.
டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் இந்திய வீரர்கள் இன்று பங்கேற்க உள்ளனர். இந்தியப் பெண்களில் அர்ச்சனா காமத், மனிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் விளையாடுகின்றனர். இன்று இந்திய அணி, ருமேனியா அணியுடன் 16வது பெண்கள் குழு போட்டியில் மோதுகிறது. இந்த போட்டி மதியம் 1:30 மணி நடைபெறுகிறது.
தடகளம்: இந்திய மகளிர் தடகள வீராங்கனைகள் கிரண் பஹல், பெண்களுக்கான 400 மீட்டர் ரவுண்ட் 1ல் விளையாடுகிறார். இது தவிர, ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ரவுண்ட் 1ல் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் கலந்து கொள்கிறார். இதில், பெண்களுக்கான 400மீ சுற்று 1 மதியம் 3:25 மணிக்கும் ஆண்களுக்கான 3000 மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று 1 இந்திய நேரப்படி இரவு 10:34 மணிக்கும் நடைபெறுகிறது.
பேட்மிண்டன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கான வெண்கலப் பதக்கப் போட்டியில் லக்சயா சென் பங்கேற்கிறார். இந்தப் போட்டியில் மலேசியாவின் லி ஜி ஜியாவுக்கு எதிராக லக்சயா சென் விளையாடுவார். பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
பாய்மரப் படகு:ஒலிம்பிக் போட்டியின் 9வது நாளான இன்று, ஆண்களுக்கான பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா சார்பில் தடகள வீரர் விஷ்ணு சரவணன் கலந்து கொள்கிறார். இதனுடன் பெண்களுக்கான பாய்மரப் படகுப் போட்டியிலும் நேத்ரா குமணன் விளையாடுகிறார். இருவரும் 9வது நாளில் ரேஸ் 7 மற்றும் ரேஸ் 8ல் பங்கேற்கின்றனர். விஷ்ணு சரவணனின் கலந்து கொள்ளும் போட்டி பிற்பகல் 3:35 மணிக்கும், நேத்ரா குமணம் கலந்து கொள்ளும் போட்டி மாலை 6:10 மணிக்கும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் பேட்மிண்டனில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி! - Paris Olympics 2024