ஐதராபாத்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆகஸ்ட்.1) 6வது நாளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்க உள்ளனர்.
6வது நாளில் இந்திய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டிகள் குறித்து காணலாம்.
கோல்ப்: இந்திய வீரர்கள் ககன்ஜீத் புல்லர் மற்றும் சுபங்கர் சர்மா ஆகியோர் ஆடவருக்கான தனிநபர் கோல்ப் விளையாட்டு முதல் சுற்றில் இன்று விளையாட உள்ளனர். ஆண்களுக்கான தனிநபர் முதல் சுற்றில் ககன்ஜீத் புல்லர் மற்றும் சுபங்கர் சர்மா மதியம் 12:30 மணிக்கு விளையாட உள்ளனர்.
துப்பாக்கி சுடுதல்: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா இன்று பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3ஆம் நிலை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே களம் காணுகிறார். அதேபோல், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதிப் போட்டியில் கவுர் சாம்ரா மற்றும் அஞ்சும் மௌத்கில் ஆகியோர் விளையாடுகின்றனர்.
இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே விளையாடும் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை இறுதிப் போட்டி மதியம் 1 மணி நடைபெறுகிறது. கவுர் சாம்ரா மற்றும் அஞ்சும் மௌத்கில் விளையாடும் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டிகள் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஹாக்கி: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தனது குரூப் பி பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி வாகை சூடிய இந்திய அணி, அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-க்கு 1 என்ற கணக்கில் டிரா செய்தது.
இந்த ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதும் ஆட்டம் பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெறுகிறது.
குத்துச்சண்டை:பெண்களுக்கான 50 கிலோ ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன், சீனாவின் வூ யுவுக்கு எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறுகிறது.
வில்வித்தை: ஆடவர் வில்வித்தை தனிநபர் எலிமினேஷன் சுற்றில் சீனா வீரரை இந்தியாவின் பிரவீன் ரமேஷ் ஜாதவ் எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற உள்ளது.
பாய்மர படகு போட்டி: ஆடவர் படகுப் போட்டியில் தமிழக வீரர் விஷ்ணு சரவணன் கலந்து கொள்கிறார். விஷ்ணு சரவணன் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கலந்து கொள்ளும் போட்டி மாலை 3:30 மணிக்கு நடைபெறுகிறது. அதேபோல் மகளிருக்கான பாய்மரப் படகுப் போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் விளையாடுகிறார். இவர் கலந்து கொள்ளும் ஆட்டம் இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க:பயிற்சியாளராக சொதப்பும் ஜெயசூர்யா? 90ஸ் நாயகனுக்கு வந்த சோதனை! - Sanath Jayasuriya