பாரீஸ்:உலகின் விளையாட்டு திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்துத் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
இதன் மூலம் கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை வெள்ளி பதக்கமே கிடைத்தது. பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் சார்பாக 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இதுவரை இந்திய அணி 4 வெண்கல பதக்கங்களை வென்று இருக்கிறது. ஆனால் நடப்பு தொடரில் ஒரு தங்கப் பதக்கத்தைக் கூட இந்தியா வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கப் பதக்க கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். இவ்வாறான எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.55 மணிக்கு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றது.
அதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ஆறு முயற்சிகள் வழங்கப்பட்டது.