சென்னை: நொளம்பூரில் உள்ள வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் ஒற்றையர் மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார் இந்திய வீராங்கனை மனு பாக்கர்.
இந்நிலையில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலம்மாள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சார்பில் மனு பாக்கருக்கு 2 கோடியே 7 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு மனு பாக்கர் பதில் அளித்தவாறு அவர்களோடு உரையாடினார்.
பிரதமர் உங்களை போனில் அழைத்து பேசியது என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு: பிரதமர் என்னை அழைத்து பதக்கம் வென்றதற்காக பாராட்டினர், அடுத்தடுத்த பயணங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அது எனக்கு மிகவும் பெருமையான தருணமாக இருந்தது. நான் வெள்ளிப் பதக்கம் வெல்வேன் என எதிர்பார்த்தேன், ஆனால் வெண்கலம் தான் கிடைத்தது. சிறிய புள்ளி அளவில் தான் வெள்ளிப் பதக்கத்தை தவற விட்டேன். இருப்பினும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டையும் எவ்வாறு சமாளித்தீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு: நான் கல்வியையும் விட்டுக்கொடுக்கவில்லை, விளையாட்டையும் விட்டுக் கொடுக்கவில்லை. நீங்களும் உங்கள் கல்வி மற்றும் விளையாட்டை சரி சமமாக கையாள வேண்டும். எனது பெற்றோர் நான் கல்வி பயில்வதை எனது மதிப்பெண் அட்டை மூலமாக கண்காணித்து கொண்டே இருப்பார்கள். கல்விக்கும், விளையாட்டுக்கும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுக்க செய்தார்கள் என்றார்.
மேலும் உங்களுக்கு பிடித்த தென்னிந்திய உணவு எது என்ற கேள்விக்கு:எனக்கு பொங்கல் மிகவும் பிடிக்கும், எனது வீட்டில் எனது அம்மா சமைக்கும் தோசை மிகவும் பிடிக்கும் என்றார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தெரியுமா என்ற கேள்விக்கு: தெரியாது என்று மனு பாக்கர் பதில் அளித்தார்.