பாரீஸ்:பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில், இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம் இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ரெய் ஹிகுச்சியிடம் தோல்வியைத் தழுவினார் அமன் ஷெராவத், இதன் பின்னர் அவரது எடை 57 கிலோவில் இருந்து 61.5 ஆக அதிகரித்துள்ளது. அதாவது வியாழக்கிழமை 6.30 மணியளவில் அரையிறுதி போட்டியானது நிறைவடைந்துள்ளது.
அதற்கு அடுத்த நாளே( வெள்ளிக்கிழமை) 9.45 மணியளவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெற இருந்தது. இதனால் எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அமன்.
அமன் ஷெராவத் எடையைக் குறைத்தது எப்படி?
- முதல் கட்ட நடவடிக்கையாக, தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு இரண்டு மூத்த பயிற்சியாளர்களும் அடுத்தடுத்து, மாறி மாறி அமன் உடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டனர்.
- அதனை தொடர்ந்து 1 மணி நேரம் ஹாட் பாத் என்று சொல்லக்கூடிய வெந்நீர் குளியல் மேற்கொள்ளப்பட்டது.
- நள்ளிரவு 12.30 மணிக்கு டிரெட்மில்லில் 1 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடியுள்ளார் அமன். இதன் விளைவாக அதன் பிறகு அவரது எடை 57.9 கிலோ குறைந்துள்ளது.
- போட்டியில் பங்கேற்றாக வேண்டும் என்றால் 57 கிலோவைத் தாண்டி இருக்கக் கூடாது என்பதால் மீண்டும் கடுமையான பயிற்சியில் இறங்கியுள்ளார் அமன்.
- டிரெட்மில் ஓட்டத்திற்குப் பிறகு, அவருக்கு 30 நிமிடம் ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர் சானா குளியல் (sauna-bath) எனப்படும் வெப்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு குளியலும் 5 நிமிடம் என 5 அமர்வுகள் நடைபெற்றது.
- பின்னர் அவருக்கு மசாஜ் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு குட்டி ஜாக்கிங் மேற்கொண்டுள்ளார்.
- இவ்வாறாக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக அமனின் எடை வெள்ளிக் கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சரி பார்த்த போது 56.9 கிலோ எடையாக இருந்தது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் குறைவாக இருந்தார்.
- பயிற்சிகளுக்கு இடையே அமனுக்கு லிக்வார்ம் வாட்டர், எலுமிச்சை, தேன் மற்றும் காஃபி ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன. மேலும் பயிற்சிகள் முடிந்த பிறகும் அமன் தூங்காமல் போட்டிக்காக காத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக பல்வேறு தடைகளைத் தவிடு பொடியாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்ற அமன் ஷெராத் - போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸை 13-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பதக்கத்தைத் தட்டி சென்றார். "முயற்சி திருவினை ஆக்கும்" என்ற வள்ளுவரின் குறளுக்கு இணங்க அமன் ஷெராத் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் விளைவாக இந்தியாவுக்கு 6வது பதக்கம் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:அழகா பொறந்தது ஒரு குத்தமா? ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பராகுவே இளம் வீராங்கனை!