நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்றாம் ஆண்டு கால்நடை மருத்துவம் படித்து வரும் மாணவி துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சொந்த ஊராகக் கொண்டவர்.
இவர் சமீபத்தில் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதனையடுத்து இவருக்கு மத்திய அரசு இன்று விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை அறிவித்துள்ளது.
விருது அறிவிப்பு குறித்த தகவல் வெளியானதும், துளசிமதி முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பெரிய வீராங்கனைகள் பெறுகின்ற அர்ஜுனா விருது இன்று எனக்கு அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சி தருகிறது. எங்கள் பெற்றோர், குடும்பத்தினரிடம் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். சிறுவயதில் இருந்து இதுபோன்ற சாதனைகள் செய்ய முடியுமா என ஏங்கி இருந்த எனக்கு தற்போது அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, "மத்திய அரசு இதுபோன்ற விருதை எனக்கு அறிவிக்கும் என்று எதிர்பார்க்காத நேரத்தில் விருதை அறிவித்துள்ளது நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.