டெல்லி:நாட்டின் 78வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி பேசுகையில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த கனவு காண்பதாகவும், அதற்கான பணிகளை தற்போது முதலே ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
2036ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணி தற்போது முதலே தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா இதற்கு முன் ஒரு முறை கூட ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவில்லை.
அண்மையில் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது குறித்து பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவிலான உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்தக் கூடிய திறன் கொண்டு இருக்கையில், ஒலிம்பிக் போட்டியை சொந்த மண்ணில் நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதாகவும் 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் தொடரை நடத்த தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
2030ஆம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டியை நடந்த இந்தியா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் செங்கோட்டை சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு நாட்டுக்காக விளையாடிய அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து விரைவில் தொடங்க உள்ள பாரீஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் கலந்து கொள்ள இந்திய பாரா விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார். முன்னதாக இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் பேசிய இம்மானுவேல் மேக்ரான், ஒலிம்பிக் போட்டி போன்ற பெரிய விளையாட்டு தொடர்களை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று கூறினார். பாரீசில் ஆகஸ்ட் 28ஆம் தேதி பாராலிம்பிக் தொடர் தொடங்க உள்ள நிலையில், விரைவில் இந்திய பாரா அணி அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வெள்ளிப் பதக்கம் கோரிய வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! - Vinesh Phogat appeal dismissed