ஹரியானா:ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் எறிந்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். இதுதான் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி பெறும் முதல் வெள்ளிப் பதக்கமாகும்.
இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5ஆக உயர்த்துள்ளது. இதன் மூலம் தனிநபர் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டையும் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் நீராஜ் சோப்ரா.
கொண்டாட்டம்:ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை தேடிக்கொடுத்த நீரஜ் சோப்ராவின் வெற்றியை பானிப்பட்டில் உள்ள அவரது குடும்பத்தினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அர்ஷத்தும் என் மகன்தான்:இது குறித்து நீரஜ் தாயார் சரோஜ் தேவி கூறுகையில்,"நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர் வெள்ளிப் பதக்கம் வென்றதும் எங்களுக்கு தங்கம் வென்றதை போல்தான் இருக்கிறது. காயம் ஏற்பட்டு இருந்த போதிலும் அவரின் செயல்திறனை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நீரஜ் மட்டுமல்ல தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத்தும் என் மகனைப் போன்றவர்தான். எல்லோரும் கடின உழைப்பிற்கு பிறகுதான் அந்த இடத்திற்கு செல்கின்றனர்" என தெரிவித்தார்.
தேசியகீதம் ஒலிக்கும்:பதக்கம் வென்றது குறித்து, நீரஜ் சோப்ரா கூறுகையில்,"நாட்டிற்காக பதக்கம் வெல்வதே மகிழ்ச்சிதான். ஆனால் என் ஆட்டத்தை சற்று மேம்படுத்த வேண்டிய நேரம் இது. நான் என் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் சில விஷயங்களில் நான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இன்று வேண்டுமானால் நம் தேசியகீதம் ஒலிக்காமல் போய் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அது வரும் காலத்தில் ஒலிக்கும். ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் ஒரு நாள் வரும்" என்றார்.
ஒலிம்பிக்கில் மலர்ந்த ஒற்றுமை: ஒலிம்பிக்கிற்கு முன்னதாகவே நீரஜ் சோப்ராவும், அர்ஷத் நதீமும் நல்ல நண்பர்களாக தொடர்ந்துள்ளனர். முந்தைய போட்டிகளின் போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட வீடியோக்களை சமூகவலைத்தளவாசிகள் இந்த தருணத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:"உங்களால் தேசம் பெருமையடைகிறது" - வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!