பாரீஸ்:பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துளளார். அவருக்குப் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றது. 2 நாள்கள் நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் படி, நான்கு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களுடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அதே போல், 4 தங்கம் உட்பட 6 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 3 தங்கம் உட்பட 12 பதக்கங்களுடன் அமெரிக்கா 3வது இடத்திலும் உள்ளது.
இந்தியா ஒரே ஒரு வெண்கல பதக்கத்துடன் 22வது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் 3வது நாளான இன்று இந்தியா அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
துப்பாக்கி சுடுதல்:
- துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு - சரப்ஜோத் சிங், மனு பாக்கர் மற்றும் அர்ஜுன் - ரிதம் சங்வான் (பகல் 12.45 மணி)
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 5வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியானது இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
- அதே போல, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் அர்ஜூன் பபுதா 630.1 புள்ளிகளைப் பெற்று, இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார். அவருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.